கர்ப்ப காலத்தில் தைராய்டு இருந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உண்டாகும்?

5953
thyroid disorders during pregnancy

தைராய்டு என்றால் என்ன?

தைராய்டு என்பது கழுத்து பகுதியில் உள்ள ஒரு வகையான சுரப்பி. தைராய்டு (Thyroid Disorders) சுரப்பி நாளமில்லா சுரப்பிகளுல் ஒன்று. தைராய்டு சுரப்பியின் மொத்த எடையே 20 முதல் 60 கிராம்களுக்கு உள்ளே இருக்கும்.

மூச்சுக் குழாயை சுற்றி இருக்கும் இந்த தைராய்டு சுரப்பியை இணைப்பது இஸ்துமஸ் தான். இந்த தைராய்டு சுரப்பி தான் ஹார்மோன்களை சுரக்க செய்யும். இந்த ஹார்மோன்கள் தான் உடலின் பல பகுதிகளுக்கு சென்று உடல் சீராக இயங்க உதவி செய்கிறது.

ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி அந்த செல்களை வேலை செய்ய வைப்பது தான் இந்த வேலை. தைராய்டில் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என்று இரண்டு வகைகள் உண்டு. இது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமான பாதிப்பை உண்டாக்குகிறது.

தைராய்டு ஹார்மோன்

தைராய்டு கால்சிடோசின், ட்ரியோடோதைரோனைன், தைராக்ஸின் என்னும் மூன்று வகையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்கின்றது. இந்த தைராக்ஸின் என்னும் T4 ஹார்மோன் வளர்ச்சி மற்றும் வளர்சிதைவு ஆகிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தைராக்ஸின் என்னும் ஹார்மோன் தான் நமது உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைத்திருக்கிறது. தோலின் மென்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிப்பது இதுதான். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும்.

தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன் ஆனது அதிகமாக சுரந்தால் அல்லது குறைவாக சுரந்தால் அதற்கேற்ப தைராய்டு நோய் பிரிக்கப்படுகிறது. அதிகமான ஹார்மோன் சுரப்பு ஹைப்பர் தைராய்டு என்றும், குறைவான ஹார்மோன் சுரப்பு ஹைப்போ தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது.

தைராய்டு அறிகுறிகள்

தைராக்ஸின் என்னும் ஹார்மோன் குறைவாக சுரந்தால்

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகரிக்கும், அதிக ரத்த போக்கு சந்திப்பார்கள். மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கும். தோலுக்கு மிருதுத்தன்மை குறைவாக இருக்கும். முடி உதிர்தல் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை கூட எதிர்கொள்வார்கள். உடல் வலி அதிகமாக உணர்வார்கள். குறைவான சுரப்பு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளை உண்டாக்கும்.

தைராக்ஸின் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரந்தால்

தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் எடை குறையக்கூடும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். சின்ன விஷயத்துக்கெல்லாம் அதிக கோபத்தை கொண்டிருப்பார்கள். தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். மாதவிடாய் கோளாறுகளும் எதிர்கொள்வார்கள். வயிற்றுப்போக்கு போன்ற சிக்கல்கள் உண்டாக கூடும்.

மேலும் கர்ப்ப கால பிரச்சனைகளை தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏன் உண்டாகிறது?

அண்டவிடுப்பின் என்றால் என்ன

அண்டவிடுப்பின் என்பது கருப்பை ஒன்றிலிருந்து முதிர்ந்த முட்டையை விடுவிப்பது. இது ஒவ்வொரு மாதமும் நிகழ்வதுதான். ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பின் போது முட்டை கருக்குழாயிலிருந்து அதாவது பெலோபியன் டியூப் வழியாக கீழே பயணிக்க கூடும். அப்போது அங்கு விந்தணுக்கள் இருந்தால் கருமுட்டை விந்தணுக்களுடன் சேர்ந்து கருவுற கூடும். பெரும்பாலான ஆரோக்கியமான பெண்களுக்கு அண்டவிடுப்பின் நிகழ்வு என்பது பொதுவாக மாதத்துக்கு ஒருமுறை நடக்கும். இது மாதவிடாய் தொடங்கிய பிறகு சில வாரங்களில் இது நிகழ்கிறது.

உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நாட்கள் பொறுத்து இது நிகழலாம். உங்கள் மாதவிடாய் சுழற்சி 28 முதல் 32 நாட்கள் வரையில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆரோக்கியமான பெண்கள் ஒவ்வொரு மாதமும் சரியான சுழற்சியை எதிர்கொண்டால் அவர்களது அண்டவிடுப்பு மாதவிடாய் சுழற்சிக்கு பின்பு 14 நாட்கள் அதாவது அடுத்த மாதவிடாய் சுழற்சிக்கு முன்னர் 14 நாட்களில் அண்டவிடுப்பு நிகழும். ஒழுங்கற்ற காலமாக இருந்தாலும் உங்கள் அண்டவிடுப்பின் நீங்கள் அறிய முடியும். இது குறித்த அறிகுறிகளை உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்யலாம்.

ஹைப்போ தைராய்டிசம்

தைராய்டு சுரப்பியில் தைராக்ஸின் ஹார்மோன் குறைய தொடங்கும் போது அது ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இது உண்டாகும் போது உடலின் வளர்சிதை மாற்றம் மெதுவாக தொடங்கும். அப்போது உடல் எடையை நீங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிப்பதை உணர்வீர்கள். உங்கள் உடல் இயக்கங்கள் குறைவாக இருக்கும். செரிமானம் மெதுவாக நடக்கும். ஹார்மோன் சுரப்பு குறைய குறைய உடலில் அறிகுறிகளும் அதிகரிக்க செய்யும்.

கர்ப்ப காலத்தில் தைராய்டு அளவு

கருவுற்ற பெண்களுக்கு முதலில் தைராய்டு பரிசோதனை செய்யப்படும். ஏனெனில் கருவுற்ற பெண்களிடம் இருந்து சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சம அளவில் கிடைக்க வேண்டும். இது குறையும் போது குழந்தைக்கு சில குறைபாடுகள் உண்டாகக்கூடும். தைராய்டு உள்ள பெண்களுக்கு தைராக்ஸின் சுரப்பு குறைவாகவே இருக்கும். அதனால் தான் கர்ப்ப காலத்தில் தைராய்டு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் உணவு பழக்கங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்குவார்கள்.

கர்ப்பிணிகளுக்கு தைராக்ஸின் தான் குழந்தையின் வளர்ச்சியை முடிவு செய்கிறது. தைராய்டு உள்ள பெண்களுக்கு மட்டும் அல்லாமல் மற்ற பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் இந்த சிக்கல் வரக்கூடும். தைராக்ஸின் குறையும் போது குழந்தையின் வளர்ச்சியில் பொறுமை. சுறுசுறுப்பின்மை, கண் பார்வையில் கோளாறு, செவித்திறன் குறைபாடு, புத்தி கூர்மை இன்மை,சோர்வு, கற்றல் குறைபாடு போன்றவை உண்டாகலாம். பெண் குழந்தையாக இருந்தால் பருவமடைதல் தாமதம், மாதவிடாய் சிக்கல் என கர்ப்பப்பையில் பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

கர்ப்பிணிக்கு முதல் மூன்று மாதங்களில் 0.2 -2.5 mU /L க்கு, அடுத்த மூன்று மாதங்களில் 0.3 -3 mU /L க்கும் இடையில் TSH அளவை பராமரிக்க எண்டோகிரைன் பரிந்துரை செய்கிறது. இந்த ஆய்வின் நோக்கமே ஆரம்பகால கர்ப்பத்தில் TSH அளவுக்கு கர்ப்பத்தின் பாதகமான விளைவுகளின் ஆபத்துக்கும் இடையிலான உறவை கண்டறிவதே.

கர்ப்ப காலத்தில் தைராய்டு சோதனை (Thyroid Disorders During Pregnancy)

கர்ப்பிணிக்கு தைராய்டு இருந்தால் அது குழந்தையையும் பாதிக்க செய்யும். இதை தவிர்க்க கர்ப்பிணிக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் கண்டறிவது அவசியம்.

கர்ப்பிணிகளின் உடலில் உண்டாகும் அறிகுறிகளை பரிசோதித்து தைராய்டு சுரப்பியின் செயலிழப்பை கண்டறிய தகுந்த பரிசோதனை செய்யப்படும். அதில் முக்கியமான பரிசோதனை

 • T3 – க்கான பரிசோதனை
 • T4 -க்கான பரிசோதனை
 • தைராய்டு ஆன்டிபாடி சோதனைகள்தைராய்டு தூண்டுதல் சோதனைகள்

இந்த பரிசோதனைகள் மூலம் T4 மற்றும் TSH ஹார்மோன் அளவுகள் மதிப்பிட்டு, கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள தைராய்டு நிலை குறித்து கண்டறியலாம். இந்த இரண்டையும் கொண்டு கர்ப்பிணிக்கு ஹைப்பர் தைராய்டு, அல்லது ஹைப்போ தைராய்டு என்பதை கண்டறிந்துவிட முடியும்.

கர்ப்பத்தில் தைராய்டு அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் இது அரிதாக உண்டாக கூடும். கர்ப்பகாலத்தில் தைராய்டு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் உண்டாகலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

ஹைப்பர் தைராய்டு

ஹைப்பர் தைராய்டு கர்ப்ப காலத்தில் அதிகப்படியான குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டால் அது கர்ப்பிணி பெண்களின் ஹைப்பர் தைராய்டிசத்தை உருவாக்கலாம் சிலருக்கு கர்ப்பகாலத்தில் சுரக்கும் ஹெச்சிஜி என்னும் ஹார்மோன் அதிகமாக இருந்தால் கர்ப்பகால ஹைப்பர் தைராய்டிசம் உருவாகலாம். இந்த ஹைப்பர் தைராய்டு 1000 கர்ப்பிணிகளில் 2 பேருக்கு ஏற்பட்டு கொண்டுதான் உள்ளது.

மேலும் இதை தெரிந்து கொள்ள: கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்காத 10 விஷயங்கள்

ஹைப்பர் தைராய்டு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் உண்டாகலாம்?

கர்ப்பிணி பெண்ணுக்கும் இதர பெண்களுக்கும் வெவ்வேறு விதமான அறிகுறிகள் உண்டாகலாம். இங்கு பொதுவாக பெண்களுக்கு உண்டாகும் அறிகுறிகளாக சொல்லப்படுவது இதுதான்.

 • எரிச்சல் மற்றும் பதட்டத்தை கொண்டிருப்பார்கள்
 • எப்போதும் ஒரு விதமான குழப்ப நிலையை கொண்டிருப்பார்கள்
 • வியர்வை அதிகமாக இருக்கும்.
 • கூந்தல் உடையக்கூடும்
 • தோல் மெலிந்து இருக்கும்
 • கைகளில் நடுக்கம் வரலாம்
 • கைகள், தசைகள் போன்றவை பலவீனமாக இருக்கலாம்
 • எடை இழப்பு மற்றும் தூங்குவதில் அதிக சிரமத்தை கண்டறியலாம்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் விரைவான இதயதுடிப்பையும் கொண்டிருக்கலாம். இந்த அறிகுறிகளை கர்ப்பிணிகள் அலட்சியம் செய்யாமல் தங்கள் மருத்துவ நிபுணரை அணுகுவதன் மூலம் இதை சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு பாதிப்பில்லாமல் தடுக்கலாம்.

ஹைப்பர் தைராய்டு விளைவுகள்

ஹைப்பர் தைராய்டு கவனிக்காத போது அது நஞ்சுக்கொடி சீர்குலைவு, தைராய்டு நெருக்கடி, முன்கூட்டிய பிரசவம், குறை பிரசவம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்பு உண்டு.

ஹைப்பர் தைராய்டு அம்மாக்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கலாம். கர்ப்பகால வயதுக்குள் மிகச் சிறிய அளவு இருக்கலாம். இவர்கள் வளர்ச்சி குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

ஹைப்போ தைராய்டு

கர்ப்பிணிக்கு ஹைப்போ தைராய்டு கண்டறிவது சற்று கடினமான விஷயம் தான். இதன் அறிகுறிகள் கர்ப்பகால மசக்கை போன்று இருக்கும் என்பதால் யாரும் உன்னிப்பாக கவனிக்க மாட்டார்கள்.

கர்ப்பிணிக்கு நோய் எதிர்ப்பு குறைபாடு இருந்தால் கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசத்தை உண்டாக்கலாம். இது நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளை அனுப்பி, சுரப்பியில் உருவாகியுள்ள செல்களை அழிக்க முயலும். இது தைராய்டு சுரப்பியின் அளவை பெரிதாக்கும். கோய்டர் குரல் வளை சுரப்பியில் ஏற்படும் வீக்கம் என்று சொல்வார்கள்.

கர்ப்பிணிக்கு உணவு முறையில் போதுமான அளவு இரும்பு சத்து கிடைக்காத போது, உடல் செயல்பாடுகளுக்கு தேவையான அளவு அயோடின் கிடைக்காத போது கர்ப்பகாலத்தில் தைராய்டு ஹார்மோனின் அளவை குறைக்க செய்யலாம்.

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்

இது உடற்செயலியல் வளர்சிதை மாற்றங்களை உண்டாக்கலாம். இந்நிலையை சுட்டிகாட்டும் அறிகுறிகள் மிக இலேசானவை இந்நிலைக்கான அறிகுறிகள் கர்ப்பகால அறிகுறிகளை ஒத்து காணப்படுகின்றன.
எடை அதிகரிப்பு முகத்தின் வீக்கம் இருப்பது
சோர்வாக உணர்வது.

மலச்சிக்கல், கூச்ச உணர்வு, கைகளில் வலி. தசைப்பிடிப்பு போன்றவை இருக்கலாம்.
குரல் கடினமாக மாறலாம். தோலில் மாற்றங்கள் உண்டாகலாம். இதயத்துடிப்பு மெதுவாக இருக்கும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கர்ப்பகால அறிகுறியோடு ஒத்து இருப்பதால் கண்டறிவதில் சிரமம் இருக்கலாம்.

ஹைப்போ தைராய்டு விளைவுகள்

கர்ப்பிணிகளுக்கு தன்னிச்சையான கருச்சிதைவு உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்கூட்டியே வலி உண்டாகலாம். பெரினாட்டல் இறப்பு, நஞ்சுக்கொடி பிரச்சனை போன்றவற்றை எதிர்கொள்ளலாம்.

ஹைப்போ தைராய்டு கொண்டிருக்கும் அம்மாவின் வயிற்றில் வளரும் கரு முன்கூட்டிய பிறப்பு, சாதாரண எடையை விட குறைந்த எடை போன்றவற்றை கொண்டிருக்கலாம்.

கர்ப்பகாலத்தில் ஹைப்போ அல்லது ஹைப்பர் தைராய்டு என எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் இதன் விளைவுகளை தடுக்கலாம்.

சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும் பிரச்சனைகள் வரலாம். அதனால் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் சரியான சிகிச்சை அளிக்க முடியும். அதோடு தைராய்டு பிரச்சனை இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. மாத்திரைகள் சாப்பிட்டாலே அவை சரி ஆகிவிடக்கூடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எதுவும் நேராது. மாத்திரைகளை தவிர்த்தால் சிசுவுக்கு மூளை வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகலாம். உரிய பரிசோதனை, மருத்துவ சிகிச்சை, உணவு முறை போன்றவை பிரசவத்தை சிக்கலில்லாமல் வைத்திருக்கும். இத்தகைய பெண்களில் சிலருக்கு பிரசவத்திற்கு பிறகு தைராய்டு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதே இதற்கு காரணம் என்றாலும் தொடர் சிகிச்சையும், மன அழுத்தமும் இல்லாமல் இருந்தால் இதை வராமலே தவிர்க்க முடியும்.

உங்களுக்கு ஏற்கனவே தைராய்டு பிரச்சனை இருந்தால் அது அண்டவிடுப்பின் ஏதேனும் மாற்றத்தை உருவாக்கலாம். கர்ப்பத்திற்கு முன்பே நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம். அப்படி இருந்தால் நீங்கள் கருவுறுதலுக்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யலாம். சில பரிசோதனைகளை செய்வதன் மூலம் கருவுறுதலை ஆரோக்கியமாக திட்டமிடலாம்.

5/5 - (123 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here