கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்னதாக செய்ய வேண்டிய பரிசோதனைகள்

கரு உருவாகும் முன்பு தயாராக வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் இன்றைய வாழ்வியல் முறைகள், உளவியல் முறைகள், உணவு முறைகள் மாற்றங்கள் கொண்டிருப்பதால் உண்டாகும் குறைபாட்டில் இந்த கருத்தரிப்பு முறை பிரச்சனையும் முன்னிலை வகிக்கிறது.

இன்றைய நிலையில் கருத்தரிப்பது என்பது சாதாரணமாக நிகழக்கூடியது என்று எண்ணாமல் முன்கூட்டியே விழிப்புணர்வுடன் இருப்பது தம்பதியருக்கு நிச்சயம் நன்மை தரக்கூடியதாக இருக்கும். ஏனெனில் கருத்தரிப்பு இயல்பாக நிகழாமல் இருந்தால் உடலில் ஏதேனும் அசாதாரண தன்மை இருந்தால் முன்கூட்டியே சிகிச்சை எடுத்து சரி செய்து விட முடியும்.

தம்பதியர் கருவுற திட்டமிடும் போது முதலில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். அப்படி மருத்துவரை சந்திக்கும் போது நீங்கள் என்ன மாதிரியான பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக நீங்கள் தாமதமான கருவுறுதலுக்கு திட்டமிட்டிருந்தால் பிறப்பு கட்டுப்பாட்டை நீக்குவதற்கு முன்பு அல்லது வேறு ஏதேனும் முறைகளை பின்பற்றி இருந்தால் அதை நீக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவரை சந்திப்பதற்கு முன்பு தம்பதியர் இருவருமே தங்கள் குடும்ப வரலாறில் யாரேனும் கருவுறுதலில் பிரச்சனையை சந்தித்திருந்தால் அல்லது குழந்தைக்கு ஏதேனும் பிறவி நோயை கொண்டு பிரசவித்திருந்தால் இப்படி குடும்ப வரலாறு குறித்து தெரிந்து அது குறித்தும் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

தம்பதியரில் பெண் ஏதேனும் குறைபாட்டுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால் அது குறித்து மருத்துவரிடம் விவாதிக்கவும் தயங்க கூடாது. மேற்கண்ட இந்த குறிப்புகளை மனதில் வைத்து கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இப்போது பரிசோதனைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

கர்ப்ப காலத்தில் தடுப்பூசிகள்

கருத்தரிக்க திட்டமிட்டால் முதலில் தற்போதைய தடுப்பூசிகள் குறித்து திட்டமிடுவது அவசியம். இதனால் கர்ப்பம் அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் நோய்களை தவிர்க்கலாம்.

டெட்டனஸ், டிப்தீரியா, பெர்டுசிஸ், ஹெபடைடிஸ் பி, எம்.எம்.ஆர் ( தட்டம்மை, அம்மை. ரூபெல்லா போன்றவற்றுக்கு தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். கர்ப்பத்துகும் முன்பு காய்ச்சலை பெறலாம்.

தடுப்பூசியை தவிர்க்கும் போது அரிதாக மூன்றாவது மூன்று மாதங்களில் பிரசவ காலத்தின் இறுதியில் ஏதேனும் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் போது புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய் பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு.

குறைந்தது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமான நிலையில் அவை இன்னும் பலவீனத்தை உண்டாக்கும். அதனால் கர்ப்பமாக இருப்பதற்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பு தடுப்பூசிகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பிணிகள் மருத்துவரிடம் மறைக்கவே கூடாத முக்கியமான விஷயங்கள்!

பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள்

தம்பதியர் இருவருமே இது குறித்து விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் சிகிச்சையளிக்கப்படாத பாலியல் நோய் தொற்றுகள் கர்ப்பம் மற்றும் குழந்தைக்கு கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும்.

உதாரணத்துக்கு கிளமிடியா குறைப்பிரசவத்துக்கும் குறைவான எடை கொண்ட குழந்தையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

கோனோரியா கருச்சிதைவுகள், முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைக்கு வழிவகுக்கும்.

சிபிலிஸ் என்னும் பிரச்சனை மற்றும் பிறப்பு குழந்தையின் மூளை, இதயம், தோல், கண்கள், காதுகள், பற்கள் மற்றும் எலும்புகள் உள்ளிட்ட பல உறுப்புகளின் பிரச்சனைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மரபணு சோதனை

இது எல்லோருக்கும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து தம்பதியரும் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பத்திற்கு முந்தைய மரபணு சோதனை கேரியர் ஸ்க்ரீனிங் என்று அழைக்கப்படுகிறது.

இது இரத்த மாதிரி அல்லது திசுவை பயன்படுத்தி செய்யப்படுகிறது. தம்பதியரில் யாரேனும் ஒருவர் அசாதாரண மரபணுக்களை கொண்டிருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்குமா என்பது கண்டறியப்படும்.

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மற்றும் முதுகெலும்பு தசை குறைபாடு போன்ற பொதுவான பரம்பரை கோளாறுகள் குறித்தும் கண்டறிய வேண்டும். சில குறிப்பிட்ட மரபணு கோளாறுகளுக்கு ஆபத்துகள் கண்டறியப்பட்டால் கூடுதல் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படும்.

சில தம்பதியர் தாமாகவே முன்வந்து அனைத்து விதமான மரபணு நோய் பரிசோதனைகளுக்கும் செய்து கொள்கிறார்கள். கருவுற்ற பிறகு சோதனை செய்யும் போது கருவில் உள்ள மரபணு குறைபாடுகளை அடையாளம் காண முடியும். அப்போது நோய் இல்லாத ஆரோக்கியமான கருவை மட்டுமே மருத்துவர்கள் வளர்க்க அறிவுறுத்துவார்கள்.

பல் பரிசோதனை

பல் பரிசோதனை

பற்கள் கர்ப்பத்துக்கு முன்பு பரிசோதிக்க வேண்டியது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் கர்ப்பகாலத்தில் உடல் அதிகப்படியான ஈறு வீக்கத்தை உண்டாக்ககூடிய ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறது. இது கர்ப்ப ஈறு அழற்சி என்று அழைக்கப்படும்.

கர்ப்ப ஈறு அழற்சி ஈறு நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு பாதிப்பை அதிகரிக்க செய்கிறது. அதோடு ஈறு நோய் முன்கூட்டிய பிரசவத்துக்கும் குறைந்த பிறப்பு எடைக்கும் ஆபத்தை உண்டாக்குகிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. கர்ப்பத்துக்கு முந்தைய பரிசோதனையை பெறுவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

பல் வலி அதிகமாக இருந்தாலும் கர்ப்பகாலத்தில் குழந்தையின் மீது கதிர்வீச்சின் அளவை குறைக்க முன்கூட்டிய இந்த பரிசோதனை பாதுகாப்பானது. அதனால் கருவுறுதலுக்கு முன்பு பல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மன ஆரோக்கியம் அவசியம்

கர்ப்பமாக இருக்க திட்டமிடும் போது உடல் ஆரோக்கியம் போன்று மன ஆரோக்கியமும் மிகவும் அவசியமானது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி 9 பெண்களில் 1 பெண் கர்ப்பத்துக்கு முன்பாக அல்லது அதற்கு பிறகு மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதனால் மன அழுத்தம் என்பது கர்ப்பத்துக்கு முன்பு சரிபார்க்க வேண்டிய விஷயமும் கூட.

கடந்த காலங்களில் மன நல பிரச்சனைகள் இருந்தால் அது கர்ப்ப காலத்தில் கருவின் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. ஏனெனில் கர்ப்ப அறிகுறிகள் சேரும் போது இவை மன ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்.

மன ஆரோக்கியம் அவசியம்

உளவியலாளர், மனநல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் இவர்கள் அனைவரது ஆலோசனையின் படி வழிநடந்தால் இதிலிருந்து மீள முடியும். இது கர்ப்ப காலத்திற்கு முன்பும் பிரசவ காலத்திற்கு பின்பும் உதவக்கூடும்.

மேற்கண்டவை எல்லாமே கருவுறுதலுக்கு முன்பு செய்யக்கூடிய பரிசோதனைகள். ஆரோக்கியமான தம்பதியர் இதை அவசியம் செய்ய வேண்டும். இவை அன்றி வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கருவுறுதலில் பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சி நாட்கள் குறித்து மருத்துவரிடம் விவாதிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரியான சுழற்சி இடைவெளி இருக்கும். 28 முதல் 35 நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி வருகிறதா, அது சீராக உள்ளதா, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உள்ளதா, பி.சி.ஓ.எஸ், தைராய்டு பிரச்சனை என ஏதேனும் கொண்டுள்ளனரா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். அப்போது தான் அண்டவிடுப்பு, கருமுட்டை நாட்கள் கணக்கில் கொள்ளப்படும். இவை ஒவ்வொன்றும் குறித்தும் பெண்கள் அனைவரும் விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.

அடுத்தது ஆண்களை பொறுத்தவரை அவர்களது விந்தணுக்கள் ஆரோக்கியம் அவசியம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அவசியமானது. விந்துவில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தினசரி பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். ஏனெனில் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு பெண்ணின் ஆரோக்கியம் போன்று ஆண்களின் ஆரோக்கியமான விந்தணுக்களும் அவசியமானது.

கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை

விரைவில் கரு உருவாக என்ன செய்ய வேண்டும் என்பதை தம்பதியர் தெரிந்து கொள்வது ஆரோக்கியமான கருத்தரிப்புக்கு உதவும். தம்பதியர் இருவருமே உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

கருவுறுதலுக்கு சரியான நேரம் உடலுறவு, கருத்தரிக்க சரியான நாள் எது, கருவுறுதல் காலம், கருமுட்டை வெளிவரும் சுழற்சி, பாலின நிலைகள் போன்றவை குறித்து அறிய வேண்டும். ஒவ்வொரு முறையும் வெளிவரும் கருமுட்டை உடன் விந்தணுக்கள் இணைந்து கருவுறுதலை உண்டாக்குகின்றன. அதனால் தான் கருமுட்டை வெளிவரும் சுழற்சியை முழுவதுமாக அறிந்து கொண்டால் கருவுறுதல் எளிதாகும் என்று சொல்வது.

கருவுறுதலுக்கு முயற்சிக்கும் போது உடலுறவுக்கு பின்பு பெண்கள் உடனடியாக எழுந்து நிற்க கூடாது. இதனால் விந்தணுக்கள் உள்ளே நீந்தி செல்லாமல் வெளியே வருவதற்கு வாய்ப்பு உண்டு. உடலுறவு கொண்ட பிறகு மல்லாந்து படுத்தால் விந்தணு கருமுட்டையை சந்திக்க வாய்ப்பு உண்டு.

இதையும் தெரிந்து கொள்ள: இரட்டை குழந்தை இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்!

சிலர் உடலுறவுக்கு பிறகு தொற்று நோய் தடுப்பதற்காக தங்கள் பெண் உறுப்பை கழுவி விடுவார்கள். தண்ணீரால் பெண் உறுப்பை சுத்தம் செய்யும் போது விந்தணுக்கள் உடலில் இருந்து வெளியே வருவதால் கர்ப்பம் தரிக்க இயலாமல் போகும். கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க உடலுறவுக்கு பிறகு பெண்கள் தங்கள் உறுப்பை சுத்தம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கரு உருவாகும் காலம்

இளம் வயதினராக இருந்தால் மாதவிடாய் சுழற்சிகளும் கருமுட்டை வெளிவரும் சுழற்சியும் சீராக இருந்தால் கரு உருவாதலுக்கான காலம் அதிகம் எடுக்காது. ஆனால் பெண் 30 வயதை கடந்தால் அல்லது 35 வயதை நெருங்கினால் கருவுருவாதலில் நீண்ட காலம் எடுக்கலாம். இவர்கள் ஆறு மாதங்கள் வரை முயற்சித்து பிறகு மருத்துவரை அணுகுவது நல்லது.

கருவுறுதலுக்கு செய்ய வேண்டியவை

உடல் பருமன். ஆண் பெண் இருவருமே இதில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். கருவுருவாகும் போது சில சிக்கல்கள் உண்டாகலாம். அதை தவிர்ப்பதற்கு உடலில் சத்துக்கள் நிறைவாக இருக்க வேண்டும்.

இருவரும் சராசரியான உடல் எடையை கொண்டிருக்க வேண்டும். கொழுப்பு சத்து குறைந்த நார்ச்சத்து நிறைந்த உணவில் கவனம் செலுத்த வேண்டும். உடல் பருமனும் கருவுறுதலை தாமதமாக்கும் அல்லது சிக்கலை உண்டாக்கக்கூடும்.

உணவில் மாவுச்சத்து, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பயறு வகைகள் வாழைப்பழங்கள், பீன்ஸ் வகைகள், காய்கறிகள், கீரைகள் போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.

உடலில் ஆரோக்கியமான அளவை உறுதி செய்ய வேண்டும். தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், முட்டை, அவகேடோ, உலர்ந்த பழங்கள் போன்றவை இயற்கை கொழுப்பை உள்ளடக்கியுள்ளன.

கருத்தரிப்பில் புரத உணவுகளும் அவசியம். இது பெண்களின் கருமுட்டை தரத்தை மேம்படுத்துகிறது என்கிறது ஆய்வுகள். கருத்தரிக்க திட்டமிட்டால் மூன்று மாதங்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது நல்லது. கோழி, முட்டை, குறைந்த கொழுப்பு, இறைச்சி, மீன், பால் பொருள்கள், பீன்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்றவற்றை எடுக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். உடலில் நீர் சத்து குறையும் போது உறுப்புகள் செயல்பாட்டை இழக்கிறது. கருத்தரிக்க உடலின் அனைத்து பாகங்களும் சீராக செயல்பட வேண்டும். நீர்ச்சத்து கர்ப்பப்பை வாய் திரவியத்தின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இது விந்தணுக்களுக்கு அதிகரிக்க செய்கிறது.

தூக்கமும் அவசியம், போதுமான அளவுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம். உடல் உறுப்புகளுக்கு ஓய்வு அவசியம். உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலை படுத்துவதற்கும் உறக்கம் மிகவும் அவசியம். குறைவான அளவு மெலடோனின் மற்றும் செரோடோனின் (தூக்கத்திற்கான முக்கியமான ஹார்மோன்களின் ) கருமுட்டை வெளிமுட்டை சுழற்சி மாதவிடாய் சுழற்சியை பாதிக்க செய்யும்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எப்போது எடுக்க வேண்டும்?

கருவுறுதலுக்கு திட்டமிடும் போது ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். காஃபின் அளவைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்ய வேண்டும். பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் கர்ப்பத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய உதவுகிறது. இது கருத்தரிப்பதற்கு முன்பு இருந்து தேவைப்படும் அத்தியாவசியமான வைட்டமின் ஆகும். ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கும், கருவை எதிர்நோக்கும் பவர்களுக்கும் வேண்டிய சூப்பர் ஊட்டச்சத்துக்கள். இது குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கவும் கர்ப்பம் முழுவதும் தேவைப்படும் முக்கியமான வைட்டமின் ஆகும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

உடற்பயிற்சி செய்யுங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது எளிதாக கருத்தரிக்க உதவும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க இவை உதவக்கூடும். தம்பதியர் இருவரும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான கருத்தரிப்பை உறுதி செய்யலாம்.

மன அழுத்தம் இல்லாமல் உணவு முறை, வாழ்க்கை முறை சீராக இருப்பதோடு மருத்துவரின் ஆலோசனையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் கருவுறுதல் நிச்சயம் ஆரோக்கியமானது. கருவுறுதலை எதிர்நோக்கும் போது முறையான ஆலோசனை பெறுவதன் மூலம் தாமதமாக கருத்தரிப்பு பிரச்சனையும் தவிர்க்கலாம்.

5/5 - (2 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here