ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்துக்கு பிறகு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம் (Postpartum Depression). பெரும்பாலான பெண்களுக்கு இந்த நிலை உண்டாகும் என்றாலும் இது குறித்து வெளியில் சொல்ல தயக்கம் கொள்கிறார்கள். அல்லது அப்படி ஒன்று உண்டா என்பதே தெரியாமல் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக கவலை கொள்கிறார்கள்.

பிரசவம் முடிந்த சில நாட்கள் அல்லது சில வாரங்கள் காரணமே இல்லாமல் கவலை, கோபம், ஆக்ரோஷம், யார் என்ன பேசினாலும் அதில் ஈடுபாடின்மை, தேவையில்லாமல் அழுகை, குழந்தை பராமரிப்பில் கவனம் செலுத்த முடியாமை போன்ற பல அறிகுறிகள் உண்டாகலாம். இவை எல்லாமே பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.

இதே போன்று கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுவது அவசியம். ஆனால் பலரும் இது இயல்பான ஒன்று என்றே அலட்சியப்படுத்தி தீவிரமாகும் போது சிகிச்சைக்கு வருகிறார்கள். இதை வெளியே சொன்னால் ஏதாவது நினைப்பார்களோ என்று நினைக்காமல் உண்மையில் இத்தகைய அறிகுறிகளை எதிர்கொள்ளும் பெண்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி தங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்கு தீர்வும் மருந்துகளும் உண்டு என்பதால் எளிதாக நீங்கள் இதிலிருந்து வெளியே வர முடியும்.

பிரசவத்துக்கு பிறகு வரும் மன அழுத்தம்

இதை பேபி ப்ளூ என்றும் சொல்வோம். குழந்தை பிறக்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக உண்டாகும். இது சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரை இருக்கும்.மேலும் பிறந்த குழந்தை தூக்கம், நாம் பராமரிக்கும் வழக்கம் போன்றவை எல்லாம் உங்களுக்குள்ளும் மாற்றத்தை உண்டாக்கும். இதனால் என்னவென்றே அறியாத சோர்வை எதிர்கொள்ள நேரிடும். இது சில நாட்கள், சில வாரங்கள் வரை இருக்கும் பொதுவானதுதான்.

இந்த நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதுமான ஓய்வு இருந்தாலே உங்கள் பேபி ப்ளூ எளிதாக மறைந்துவிடும். ஆனால் இதை அலட்சியப்படுத்தும் போது அவை மாறி உங்களை மன அழுத்தத்தில் கொண்டுவிடும். பிரசவத்துக்கு பிறகு வரும் சில வாரங்களில் சரியாகும் இந்நிலை அலட்சியப்படுத்தும் போது மூன்று மாதங்கள் வரையில் கூட இருக்கும்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: பிரசவத்துக்குப் பிறகு மாதவிடாய் சுழற்சி எப்போது வரும்?

நாளடைவில் இதிலிருந்து விடுபட நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் முடியாமல் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் தனியாக இருக்கவே விரும்புவீர்கள். எதை பார்த்தாலும் ஈடுபாடு இருக்காது. உங்களை மீறி உங்களுக்கு அழுகை வரலாம். சிறிய விஷயத்துக்கு கூட அதிகமாக கோபப்படுவீர்கள். சில நேரங்களில் அன்றாட விஷயங்களை செய்வதில் கூட நினைவுத்திறன் குறையக்கூடும்.

உங்கள் குழந்தையை பார்த்துகொள்ளும் நிலையில் கூட நீங்கள் முழுமையாக கவனிக்கமாட்டீர்கள். சொல்லபோனால் சில அம்மாக்களுக்கு குழந்தையை பார்க்கும் போது கோபம் கூட வரலாம். குழந்தை வந்ததும் நினைத்த நேரத்தில் தூக்கம் இல்லை, சரியான உணவு இல்லை., வெளியில் செல்ல போகமுடியவில்லை போன்ற விஷயங்கள் குழந்தை மீது வெறுப்பை கூட உண்டாக்கலாம். இத்தகைய நிலை வரும் வரை தவிர்த்து ஆரம்பகட்ட அறிகுறி உணரும் போதே மருத்துவரை அணுகுவதன் மூலம் பாதுகாப்பாக இதிலிருந்து வெளிவரலாம்.

பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம் (Postpartum Depression) காரணங்கள்

ஒரு பெண் கர்ப்பமாகும் போது சுற்றியிருக்கும் குடும்பத்தினர் அந்த பெண்ணின் மீது கவனம் இருக்கும். பிரசவத்துக்கு பிறகு முழுமையாக அந்த குழந்தையின் மீது இருக்கும்.பிரசவத்திற்கு பிறகு போதுமான உணவு இல்லாதது போதுமான நீரேற்றம் இல்லாதது போன்றவை சோர்வை உண்டாக்கும். மேலும் கர்ப்பகாலத்தில் உச்சத்தில் இருக்கும் ப்ரொஜ்ஸ்ட்ரோன் ஹார்மோன் ஆனது பிரசவம் முடிந்த சில மணி நேரங்களில் இறங்கிவிடும். இவை மட்டுமல்ல தைராய்டு ஹார்மோன் என உடலில் அதிகமாகவே இந்த ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கிவிடுவதால் தான் மனதில் தேவையற்ற சோர்வும் மன அழுத்தமும் உண்டாகிறது.

எமோஷனல்

கர்ப்ப காலத்திற்கு முன்பே ஏதேனும் கோளாறு (psychiatric disorders, mood disorder or obsessive disorder ) கொண்டிருந்தால், தூக்கமின்மை கொண்டிருந்தால், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்டிருந்தால் அவர்களுக்கு பிரசவத்துக்கு பிறகு மன அழுத்தம் வரலாம். அதே நேரம் குடும்பத்தில் நெருங்கிய உறவினர் தவறி இருக்கலாம். அந்த இழப்பு ஏற்றுகொள்ள முடியாததாக இருக்கும். பொருளாதார நிலை மோசமானதாக இருக்கலாம். உறவினர்களுக்குள் புரிதல் இல்லாமல் மனக்கசப்பு நேரிடலாம். இவை எல்லாமே எமோஷனல் ஆக வரக்கூடிய மன அழுத்தங்கள்.

பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தத்திற்கான தீர்வுகள்

இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உண்டு. ஒன்று மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது. இரண்டாவது உளவியலாளர்களிடம் கவுன்சிலிங் பெறுவது. மருத்துவ சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது மிகப்பெரும் மன அழுத்தம் (Postpartum Depression) இருந்தாலும் அதிலிருந்து எளிதில் மீண்டு வர முடியும்.

மருத்துவ தெரபி

பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தத்துக்கு தீர்வு உண்டு என்பதை முதலில் நம்புங்கள். சிகிச்சைக்கு மருத்துவரை அணுகும் போது உடலில் ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன் அளவு குறைந்திருப்பதை ஈடு செய்ய ஆண்டி டிப்ரஸண்ட் கொடுப்பார்கள். இது நேரடியாக மூளைக்கு சென்று ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் பாதிப்பை குறைக்க செய்யும்.

முன்கூட்டியே மருந்துகள் எடுத்துகொண்டிருப்பவர்கள் மருத்துவரை அணுகி சரியானதை எடுக்க வேண்டும். அப்போதுதான் மைல்டாக இருக்கும் இந்த பிரச்சனையை பெரிதாகாமல் தடுக்க முடியும்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: பிரசவத்திற்கு பிறகு முதுகு வலி உண்டாக காரணம் என்ன?

கவுன்சிலிங்

ஒரு பெண் கவுன்சிலிங் வரும் போது தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் மாற்றத்தை புரிந்து அதை எதிர்கொள்ள வேண்டும். இது பிரசவத்துக்கு பிறகு முதல் சில வாரங்கள், முதல் சில மாதங்கள் வரை மட்டுமே இருக்கும் என்பதை உணர வேண்டும். உங்கள் நெருக்கத்துகுரியவர்களிடம் ஆலோசிப்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். இதன் மூலம் உங்களை நீங்கள் பார்த்துகொள்ள முடியும். தேவையெனில் உங்கள் நெருக்கமானவரிடம் உதவி கேட்பதை தயங்க வேண்டாம்.

உங்களுக்கு எப்போது பிரச்சனை என்பதை உணர்ந்தாலும் அதை பெரிதாக்குவதற்கு முன்பு உங்கள் நெருங்கிய தோழி, குடும்பத்தினர், உங்கள் கணவர் போன்றவர்களிடம் அனுபவம் மிக்கவர்களிடம் பகிர்வதன் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

உங்களுக்கு எப்போதெல்லாம் ஓய்வு தேவை என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்களும் ஓய்வு எடுக்க பழகுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். இந்த நேரம் உங்களுக்கானது என்பதை உணர்ந்து உங்களுக்கு பிடித்த மியூஸிக் கூட கேட்கலாம்.

அறிகுறிகள் வித்தியாசமாக உங்களையே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுத்தம் இருந்தால் நீங்கள் அலட்சியம் செய்யாமல் முதலில் மருத்துவரை அணுகி தயங்காமல் உங்கள் பிரச்சனைகளை அலசுங்கள். நிச்சயம் இதிலிருந்து விடுபடுவீர்கள்.

பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம் குழந்தையின் அப்பாக்களையும் பாதிக்கிறது என்பதை பலரும் அறியவில்லை. உண்மையில் அவர்களுக்கும் டெஸ்டொஸ்ட்ரான் அளவு மாற்றம் உண்டாகலாம். குழந்தையைப் பார்த்துகொள்ளும் பொறுப்பு, இரவில் தூக்கமின்மை போன்றவற்றை எதிர்கொள்வார்கள். அதிலும் மதுப்பழக்கம் கொண்டிருந்தால் இன்னும் கூடுதலாக மன அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். குழந்தை பராமரிப்பு, மருத்துவ செலவு போன்றவை அவர்களையும் அழுத்தத்துக்கு ஆளாக்கலாம்.

இதை தவிர்க்க அப்பாக்களும் அம்மாவை போன்று கவனமாக தங்களை பார்த்துகொள்வதோடு குடும்பத்தோடு இணைந்து பகிர்ந்து ஆலோசிப்பது இந்த அழுத்தத்திலிருந்து இருவரையும் கொண்டு வர செய்யும் என்பது தான் மருத்துவரது முக்கிய அறிவுறுத்தல். பிரசவத்துக்கு பிறகு மன அழுத்தத்திலிருந்து தீர்வு காண இன்னும் சில விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

மருத்துவ ஆலோசனை உளவியலாளர் ஆலோசனைக்கு பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை

சரியான ஓய்வு மற்றும் தூக்கம் :

குழந்தை தூங்கும் வரை காத்திருந்து அவர்களை கவனம் செலுத்தாமல் நீங்களும் ஓய்வெடுங்கள். இல்லையெனில் தூக்கம் சரியில்லாத போது எரிச்சல் அதிகரிக்கும். உங்கள் ஓய்வு தூக்க நேரம் குறைவாக இருந்தால் குடும்பத்தினரை அணுகுங்கள்.

ஆரோக்கியமான உணவு:

ஆரோக்கியமான சரியான உணவு மனச்சோர்வை உண்டாக்காது. ஆரோக்கியமான உணவு பழக்கம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். அவ்வபோது ஆரோக்கிய சிற்றுண்டி வகைகளும் சேர்க்கலாம். உடலில் போதுமான நீரேற்றத்தோடு இருக்க வேண்டும். அப்போது தான் தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். தாய்ப்பால் இல்லை என்பதும் உங்களை சோர்வுக்கு ஆளாக்கும். அதனால் நீரேற்றமாக இருங்கள்.

உடல் செயல்பாடு

பிரசவத்துக்கு பிறகு வழக்கமான உடல் செயல்பாடு முக்கியம். புதிய காற்று, சூரிய ஒளி என்று வெளியில் வரும் போது உங்கள் மனம் இலேசாக இருப்பதை பார்க்கலாம். வீட்டின் மூலையில் ஓய்ந்து கிடக்காமல் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு மிதமான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். குறைந்த நேரம் பிரசவத்துக்கு பிறகு உடற்பயிற்சி செய்தால் கூட போதுமானது. இதனால் மன அழுத்தம் பதட்டம் இரண்டுமே குறையும். உற்சாகமாக வைத்திருக்கும்.

குடும்பத்தினர் உறவினருடன் நேரம் செலவிடுங்கள்

உங்களுக்கும் குழந்தைக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஓய்வு எடுத்த பிறகு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் நேரம் செலவிடுங்கள். தனிமையாக இருக்காதீர்கள். உங்கள் உணர்வுகள் உணர்ச்சிகளை நெருங்கியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் துக்கம் இரண்டையும் மனதில் கொள்ளாமல் உங்கள் துணையிடமும் பகிருங்கள். இதனால் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here