கர்ப்ப கால ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதோடு, கர்ப்ப காலத்தில் சில உணவுகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். அது என்னென்ன உணவுகள் பார்க்கலாம்.

முட்டையை அப்படியே சாப்பிடுவது

ஆஃப் பாயில் என்று சொல்லகூடிய வகையில் முட்டையை பாதியில் வேகவைத்தோ அல்லது அப்படியே சாப்பிடுவதோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்க வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் முட்டையை நன்றாக வேகவைத்து, அல்லது பொரித்து சாப்பிடுவது பாதுகாப்பானது.

மெர்குரி மீன்கள்

மீன்களில் பாதரசம் அதிகமாக இருந்தால் அது கருவின் மூளை மற்றூம் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் குறைபாட்டை உண்டாக்கிவிடக்கூடும். சுறா, வாள்மீன், கானாங்கெளுத்தி. ஓடு மீன் போன்றவை அதிக அளவு மெர்க்குரியை கொண்ட மீன்கள் ஆகும். அதற்கு மாற்றாக சால்மன், டூனா கேட் மீன் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனயுடன் எடுத்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு 12 அவுன்ஸ் வரை மீன் எடுத்துகொள்ளலாம்.

அரைவேக்காட்டு இறைச்சி

இறைச்சிகள் புரதம் நிறைந்தவை என்பதால் கர்ப்பகாலத்தில் எடுத்துகொள்வது நல்லது. எனினும் இறைச்சியை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது. அரை வேக்காட்டு இறைச்சியில் டாக்சோபிளாஸ்மா பாராசைட் மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியா உள்ளது. இது ஒவ்வாமையை உண்டாக்க வாய்ப்புண்டு. அதனால் இயன்றளவு இறைச்சியை வேக வைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது.

காஃபைன் பானங்கள்

காஃபியை விரும்பி குடிப்பவர்கள் கர்ப்பகாலத்தில் அதை இயன்றளவு தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துகொள்ள வேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் ஏனெனில் காஃபியில் இருக்கும் காஃபைன் போன்ற பொருள்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்க செய்யும். அடிக்கடி காஃபி குடிக்கும் போது அது கருச்சிதைவு உண்டாக்கிவிடும் அபாயமும் உண்டு. காஃபி என்றில்லாமல் காஃபைன் நிறைந்த சாக்லேட், பானங்கள், டீ போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அல்லது நாள் ஒன்றுக்கு 2 கப் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள்

கர்ப்ப காலத்தில் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள மருத்துவர் வலியுறுத்துவதுண்டு அதனால் முளைகட்டிய தானியங்களையும் பலர் உணவில் சேர்ப்பதுண்டு. ஆனால் பச்சையாக சாப்பிடும் எந்த உணவுகளும் கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சால்மோனெல்லா, இ- கோலை, லிஸ்தீரியா போன்ற பாக்டீரியாக்கள் உண்டாக கூடும். இது கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்யாது.

பதப்படுத்தப்படாத பால்

கர்ப்பிணிக்கு கால்சியம் சத்து தேவை என்பதால் பால் குடிப்பது உண்டு. ஆனால் காய்ச்சாத பால், பதப்படுத்தப்படாத பால் போன்றவை உடலுக்கு நன்மை செய்யாது. இதனால் கர்ப்பிணிகள் தொற்று நோய்க்கு ஆளாக கூடும்.

பழங்கள் காய்கறிகள்

கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடிய பழங்கள், காய்கறிகள் என்று எல்லாமே கவனமாக எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் இதில் கருவின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் டாக்ஸோபிளாஸ்மா பாரசைட் என்னும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா உள்ளது. அதனால் பழங்கள் காய்கறிகள் என எதை வாங்கினாலும் ஓடும் நீரில் அலசி பிறகு பயன்படுத்த வேண்டும். எப்போதும் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் பழங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழங்களில் பப்பாளிகாயாக கர்ப்பகாலம் முழுவதுமே சேர்க்க கூடாது. பழமாக முதல் மூன்று மாதங்களில் தவிர்க்க வேண்டும். அதே போன்று மிதமான அளவில் கர்ப்பத்தில் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் எடுக்கலாம். அதே போன்று அன்னாசி பழத்தையும் கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை கர்ப்பப்பை வாய் தளர்த்த வாய்ப்புகள் உண்டு.

துரித உணவுகள்

வாய்க்கு ருசியாக இருக்கும் என்று அதிகம் பதப்படுத்தப்பட்ட ப்ர்சர்வேட்டிவ் உணவுகளை கர்ப்பகாலம் முழுவதுமே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் பிஸ்பினால் ஏ என்னும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது என்பதோடு அதிக உப்பு, மசாலா நிறைந்த இவை மலச்சிகல் பிரச்சனை அதிகரிக்க செய்யும். அதே போன்று செயற்கை குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும். பழச்சாறுகள் நல்லது என்றாலும் அதை வீட்டில் தயாரித்த பழச்சாறுகளை மட்டுமே குடிக்க வேண்டும். இவை தவிர அதிக உப்பு, அதிக எண்ணெய் பண்டங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் என எல்லாமே தவிர்க்க வேண்டியவையே.

ஒவ்வாமை உணவுகள்

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை யாராலும் கணிக்க முடியாது. சில பெண்களுக்கு அதுவரை பிடிக்காத உணவுகள் பிடிக்கும். சிலருக்கு பிடித்த உணவுகளே ஒவ்வாமையை உண்டாக்கும். எனினும் பொதுவாக கர்ப்பகாலத்தில் சோயா, கோதுமை, மாட்டுப்பால், முட்டை, வேர்க்கடலை, பருப்புகள், போன்றவை ஒவ்வாமையை தவிர்க்க கூடிய உணவுகளாக சொல்லப்பட்டாலும் கர்ப்பிணிகள் தங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளை கவனித்து அதை தவிர்க்க வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

மசாலா பொருள்கள்

கர்ப்பகாலத்தில் மசாலா பொருள்கள் என்று சொல்லப்படும் பெருஞ்சீரகம், மல்லி விதைகளை அதிகம் சேர்க்க கூடாது. இது உடலில் ஃபைட்டோ ஈஸ்ட்ரஜன் அதிகப்படுத்தி கருச்சிதைவுக்கு தூண்டும். எள் சத்துகொடுக்க கூடியது என்றாலும் கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டரில் தவிர்த்து மற்ற காலங்களில் இதை சேர்க்கலாம். இதுவும் கருக்கலைப்பை ஊக்குவிக்க வாய்ப்புண்டு. வெந்தயம் கர்ப்பப்பை வலுவிலக்க செய்ய வாய்ப்புண்டு. கர்ப்பமாக இருக்கும் போது அதிக வெந்தயம் சேர்க்கவேண்டாம் இது குறைபிரசவத்தை உண்டாக்க வாய்ப்புண்டு. அதே போன்று அதிமதுரம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் கிளைசரின் ஆனது கரு வளர்ச்சியை பாதிக்கும். குறிப்பாக நஞ்சுக்கொடி ஊடுருவி அதில் இருக்கும் ஹார்மோன் குழந்தையின் உடலில் சென்றுவிடும். இது குழந்தையின் அறிவாற்றலை பாதிக்க செய்யும். மேலும் கர்ப்ப காலத்தில் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கி குறைபிரசவத்தை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.

அதனால் மேற்கண்ட பொருள்களை கர்ப்பிணிகள் தவிர்ப்பதே நல்லது.

5/5 - (119 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here