கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள்!

கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கர்ப்பிணி பெண்கள் பொதுவாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஹர்மோன் மாற்றத்தால் உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான குறைபாடுகளை எதிர்கொள்ள திணறுவது இயல்பானது. இதில் ஆரோக்கியமான பெண்களாக இருந்தாலும் அவர்களுமே இதை தாண்டி வரக்கூடும். இந்நிலையில் ஏற்கனவே உடல் பலவீனமான பெண்கள் தான் கருவுற்ற இந்த காலத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்துவிடுவார்கள்.

எல்லா பெண்களுமே கர்ப்பகாலத்தில் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனைகள் குறித்து தான் இப்போது பார்க்கபோகிறோம். இது ஆரோக்கிய பிரச்சனைகள் அல்ல. அதே போன்று கர்ப்பகால நோய்கள் ஆரோக்கிய குறைபாடுகளும் கூட ஒவ்வொரு கர்ப்பிணியின் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் கர்ப்ப காலத்தில் உண்டாகும் பொதுவான பிரச்சனைகள் மட்டுமே இப்போது பார்க்கலாம். 

ஆரோக்கியமான கர்ப்பமாக இருந்தாலும் கர்ப்பிணிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். இதுவும் சில பெண்களுக்கு சிரமமானதாகவும் பல பெண்களுக்கு அது கடுமையானதாகவும் இருக்கும். 

கர்ப்ப கால மார்னிங் சிக்னஸ் காலை நோய்

இதை அனுபவிக்காத பெண்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 5 கர்ப்பிணிகளில் 4 பேருக்கு இந்த காலை நோய் இருக்கும். கருவுற்ற 3 அல்லது 4 ஆம் வாரங்களில் இவை தொடங்குகிறது. இது 17 முதல் 20 வாரங்கள் வரையிலும் இருக்கும். வெகு சிலருக்கு கர்ப்பகாலம் முழுவதுமே  காலை நோய் இருக்க கூடும். இதிலும் வெகு சிலருக்கு அதாவது 10 கர்ப்பிணி பெண்களில் 3 பேருக்கு கடுமையான காலை நோய் வருகிறது. 

ஹார்மோன் மாற்றத்தால் உடலில் உண்டாகும் மாற்றங்களால் காலை நோய் மோசமானதாக இருக்கும். இதனால் கர்ப்பிணி பெண்கள் உணவையும் நீராகாரத்தையும் கூட எடுக்க முடியாது. கொஞ்சம் கவனமும் உணவில் சில (ஆரோக்கியமான) மாற்றத்தையும் மருத்துவரின் ஆலோசனையையும் பெற்று அதை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதாக  இதை கடந்துவிட முடியும். இந்த காலை நோயை தவிர்க்க  முடியாது. குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைக்க முடியும். 

இதையும் தெரிந்து கொள்ள: பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக டிப்ஸ்!

கர்ப்ப கால நெஞ்செரிச்சல் பிரச்சனை

கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டர் மற்றும் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் இவை அதிகமாக உணரப்படும். நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக்கோளாறுகள் என்பது மார்பு பகுதியையும் மார்பை சுற்றியும் நடுப்பகுதியிலும் எரியும் உணர்வு ஆகும். வயிற்றில் அமிலம் உணவு குழாய் வழியாக மேல் எழுவதால் இது உண்டாகிறது. குழந்தை வயிற்றில் அழுத்தும் போது நெஞ்செரிச்சல் உண்டாக வாய்ப்புண்டு. இதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். 

கர்ப்ப காலத்தில் உணவு பழக்கம் வழியாகவே இதை கட்டுப்படுத்திவிடலாம். ஒரே நேரத்தில் உணவை  எடுக்காமல் சிறிது சிறிதாக மெதுவாக சாப்பிடலாம்.  உணவை மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிட வேண்டும். உணவுக்கு பிறகு வெதுவெதுப்பான வெந்நீர் குடிக்க வேண்டும். இயன்றால் சிறிதளவு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். 

அதிகப்படியான நெஞ்செரிச்சல் இருந்தால் அதற்கான தடுப்பு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்ள வேண்டும். 

கர்ப்ப கால வீக்கம் பிரச்சனை

உடலில் வழக்கத்தை விட அதிகமாக திரவங்கள் இருக்கும் போது இது கணுக்கால், பாதங்களில் வீக்கத்தை உண்டாக்கும். இது எடிமா என்றழைக்கப்படுகிறது, கர்ப்ப கால கால் வீக்கம் என்பது எல்லா பெண்களுமே அனுபவிப்பதுண்டு. 

இது பொதுவானது. தூங்கும் போது கால்களை உயர வைத்து தூங்கலாம். நாற்காலியில் நீண்ட நேரம் உட்காரும் போது கால்களை உயர வைத்து  இருக்கலாம். அதிகளவு நீர் குடிக்கலாம். சிறுநீரை அடக்கிவைக்காமல் அவ்வபோது வெளியேற்றிவிட வேண்டும் இல்லை என்றால் சிறுநீர் தொற்று ஏற்படும். இந்த வீக்கமானது மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும். இவை நீடித்து இருந்தால் அது ஆழமான நரம்பு த்ரோம்போசிஸின் அறிகுறியாக இருக்கலாம். 

அதிகமாக வீங்கிய கணுக்கால் விரல்கள், கைகள் அல்லது முகம் போன்றவை எல்லாமே எக்லாம்ப்சியாவின் அறிகுறியாக இருக்கலாம். கணுக்கால் வீக்கம் என்பது இயல்பானது. ஆனால் முகத்திலும் வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. 

கர்ப்ப கால முதுகுவலி பிரச்சனை

கர்ப்ப காலத்தில் தவிர்க்க முடியாதவற்றில் முதுகுவலியும் ஒன்று. கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டரில் இவை தெரியாது. ஆனால் இரண்டாம்  ட்ரைமெஸ்டரில் தொடங்கி மூன்றாம் ட்ரைமெஸ்டரில் இவை அதிகரிக்க கூடும். குழந்தை வளர தொடங்கும் போது முதுகெலும்புகளில் அதிக சிரமம் உண்டாகும். குழந்தை வளர்ந்து வயிறு பெரிதாக இருக்கும் போது கர்ப்ப காலத்தில் முதுகு வலி அதிகரிக்க கூடும். தூங்கும் நிலையில்  அசெளகரியம் இருந்தால் இந்த வலி இன்னும் அதிகரிக்க கூடும். எல்லா நேரங்களிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் எளிதாக இதை கடந்துவிடலாம். 

தூங்கும் போது முதுகுபக்கத்துக்கு தலையணை வைத்து படுக்கலாம். மிதமான பயிற்சி செய்யலாம். முழங்கால்களை வளைத்து முதுகு வளைவில்லாமல் பார்த்துகொள்ளலாம். உட்காரும் போதும் உடல் எடை முன்பக்கமாக இருப்பதால் முதுகு வளைந்து இருக்கும். முதுகு பக்கம் தலையணை வைத்து உட்காரலாம். இப்படி முதுகுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முதுகுவலியை தடுக்கலாம். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

கர்ப்ப கால மலச்சிக்கல் பிரச்சனை

கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடியதே. இதை அலட்சியப்படுத்தாமல் எளிதில் தீர்வு காண நீங்கள் உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் செய்தால் போதும்.மலம் இறுகி கடினத்தன்மையோடு மலம் கழிப்பதில் அதிக சிரமத்தை உண்டாக்கலாம். கர்ப்பகாலத்தில் ஹர்மோன் மாற்றம்,  இரும்புச்சத்து மாத்திரைகள் கூட மலச்சிக்கலுக்கான காரணங்களாக சொல்லப்படுகிறது. 

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி!

காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகைகள், முழு தானிய ரொட்டி, நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகள் எல்லாமே மலச்சிக்கலை குறைக்க கூடியவை. மேலும் கர்ப்பகாலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். உடலுக்கு எப்போதும் ஒய்வு என்றில்லாமல் உடலுக்கு உழைப்பும் இருக்க வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் வரை  நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. பெருமளவு உணவு பழக்கங்கள் வழியாகத்தான் இதை சரிசெய்ய முடியும். 

இவை தவிர இன்னும் பல பிரச்சனைகள் உண்டு. இவை எல்லாமே பெருமளவு கட்டுப்படுத்தகூடியவையே. எனினும் பொதுவான  முக்கிய பிரச்சனைகளை  மட்டுமே இங்கு கொடுத்திருக்கிறோம்.

5/5 - (114 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here