கரு டாப்ளர் ஸ்கேன் என்றால் என்ன?

டாப்ளர் ஸ்கேன் என்பது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகும். இந்த ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தையின் வளர்ச்சி,தொப்புள் கொடி, மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட கருவின் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கவனிக்க உதவுகிறது. குறிப்பாக குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நஞ்சுக்கொடி வழியாக சீராக செல்கிறதா என்பதையும் இந்த ஸ்கேன் வழியாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் இருக்கும் கருவுக்கு, இரத்த ஓட்டம் சீராக சென்றாலே கரு ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். மாறாக ரத்த ஓட்டத்தில் ஏதேனும் இயல்பிற்கு மாறாக இருந்தால், கரு ஏதோ ஒரு விதமான அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இந்த டாப்ளர் ஸ்கேன் ஆனது கர்ப்பிணி பெண்ணின் மூன்றாவது ட்ரைமெஸ்டரான 7 ஆம் மாதத்தில் தான் செய்யப்படுகிறது. வெகு அரிதாக (அதிக ஆபத்துள்ள கர்ப்பம் போன்ற சூழ்நிலைகளில்) மருத்துவர் ஒன்றுக்கு மேற்பட்ட டாப்ளர் ஸ்கேன்களை செய்யுமாறு கூறுவதும் உண்டு.

கரு டாப்ளர் ஸ்கேன்

டாப்ளர் ஸ்கேன் பாதுகாப்பானதா?

பலருக்கும் இது குறித்த சந்தேகம் உண்டு. ஸ்கேன் செய்வதன் மூலம் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். அனைத்து அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களையும் போலவே, அனுபவமிக்க மகப்பேறு மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலில் மருத்துவ நிபுணரால் செய்யப்படும்போது இந்த டாப்ளர் ஸ்கேன் பாதுகாப்பானது.

கர்ப்பக்காலத்தில் டாப்ளர் ஸ்கேன் ஏன் அவசியம் செய்ய வேண்டும் !

கீழ்க்காணும் விஷயங்கள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில் மருத்துவர் டாப்ளர் ஸ்கேன் செய்வதற்கு அறிவுறுத்தலாம்.

கருவில் இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கரு வளரும் போது, வளர்ச்சிக் குறைபாடு, டி.டி.டி.எஸ் (Twin-Twin Transfusion Syndrome) தண்டு சிக்கல் போன்ற பல சிக்கல்கள் ஏற்படலாம். எனவே மல்டிபிள் பிரக்னன்சி எனப்படும் பல கருவுறுதல் என்ற நிலை பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு ஒரு சிக்கலான சூழ்நிலையாககவே கருதப்படுகிறது.

வயிற்றில் இருக்கும் குழந்தை ரீசஸ் ஆன்டிபாடிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

குழந்தை ஆரோக்கியமான நிலையில் வளராமல் இருக்கலாம்.

கர்ப்பிணிக்கு இதற்கு முன்பு பிரசவம் நடந்திருந்தால் அந்த குழந்தை சிறிய குழந்தையை பெற்றெடுத்திருந்தாலும் ஸ்கேன் செய்ய வலியுறுத்தலாம்.

கர்ப்பிணி ஏற்கனவே கருத்தரித்து கருச்சிதைவுக்கு உட்பட்டிருந்தாலும் டாப்ளர் ஸ்கேன் செய்வதற்கு பரிந்துரைப்பார். அல்லது முந்தைய பிரசவக்காலத்தில் குழந்தை பிறந்த உடனேயே இறந்து விட்டாலும் இந்த ஸ்கேன் எடுக்க சொல்வார்கள்.

கர்ப்பிணி கர்ப்பக்காலத்தில் நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்தாலும் அவரும் இந்த ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பாதுகாப்பாக உறுதி செய்துகொள்ளலாம்.

கர்ப்பிணி பெண் உடல் எடைக்கான குறியீட்டில் BMI அதிகமாக இருந்தாலும் அல்லது குறைந்திருந்தாலும் கூட ஸ்கேன் செய்ய வேண்டும்.

வெகு அரிதாக கர்ப்பிணி பெண் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் இந்த ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குழந்தை ஆரோக்கியமான, சாதாரண விகிதத்தில் வளரவில்லை என்றால், நஞ்சுக்கொடி சாதாரணமாக செயல்படுகிறதா என்பதைக் காட்டவும் டாப்ளர் ஸ்கேன் உதவும்.

டாப்ளர் ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்க வேறு சில காரணங்கள்:

இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை எளிதில் ஓட்ட உதவும் தொப்புள் தமனிகளின் ‘குறைந்த எதிர்ப்பு’ தன்மையை சரிபார்க்க. கருப்பை தமனிகள் கருப்பைக்கு கருவுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்கள். டாப்ளர் ஸ்கேன் கருப்பை தமனி வழியாக போதுமான இரத்தம் நஞ்சுக்கொடியை அடைகிறதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.

குழந்தை ஆரோக்கியமான விகிதத்தில் வளர ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை. எனவே, கருப்பை தமனிகளின் சுவர்கள் விரிந்து இருக்க வேண்டும், கர்ப்பப்பக்கு தேவயான இரத்தத்தை சீராக பெற அனுமதிக்க வேண்டும்.

கர்ப்பக்காலத்தில் பொதுவாக சிறிய தமனிகளின் விரிவடைவதால், கர்ப்பப்பையை அதிக இரத்தம் சென்றடைவதும் இயல்பாகிறது. இது குறைந்த எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. மாறாக கர்ப்பிணி பெண் புகைபிடித்தல், ஆல்கஹால் உட்கொள்வது போன்ற பழக்கங்களை கொண்டிருந்தாலோ, உடல் ஆரோக்கிய குறைபாட்டுக்காக சில மருந்துகளை உட்கொண்டிருந்தாலோ இந்த மாறுபட்ட வாழ்க்கை முறை தமனிகளின் அளவு அதிகரிப்பதிலும் விரிவடைய செய்வதில் எதிர்ப்பை அதிகரிக்கும், இதனால் கருவுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் பாதிக்கும்.

Rh உணர்திறன் ஏற்பட்டதா என்பதை சரிபார்க்க. மூளையில் உள்ள ஒரு இரத்த நாளத்தின் வழியாக செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தை கண்டறிவதன் மூலம் கருவின் ஆரோக்கியத்தைக் கண்டறியலாம்.

கரு டாப்ளர் ஸ்கேன் மூலம் பெறக்கூடிய பிற புரிதல்கள்:

டாப்ளர் ஸ்கேன் செய்வதன் மூலம் கருவின் இதயத் துடிப்பை உறுதிப்படுத்த உதவுகிறது

தொப்புள் கொடியின் நிலை தாயிடமிருந்து ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கருவுக்கு கொண்டு செல்கிறது, இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை திருப்பி அனுப்புகிறது.

குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டு செல்லும் நஞ்சுக்கொடியின் நிலை மற்றும் கழிவுகளை அகற்றவும், ஆக்ஸிஜனை வழங்கவும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றவும், குழந்தையை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும், கர்ப்ப காலத்தில் தேவையான ஹார்மோன்களை சீராக சுரக்கவும் உதவுகிறது.

பொதுவான வளர்ச்சி – டாப்ளர் ஸ்கேன் செய்வதன் மூலம் குழந்தையின் நீளம் மற்றும் எடை அடிப்படையில் குழந்தையின் வளர்ச்சியையும் சொல்ல முடியும்.

தாயின் ஆரோக்கியம்- ஒரு டாப்ளர் ஸ்கேன் கருவின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் தாய்க்கு குழந்தைப் பிறப்பின்போதோ அதற்கு முன்போ சிக்கல் ஏற்படுத்தக் கூடிய உறைதல் அல்லது நீர்க்கட்டி போன்ற ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை தீர்மானிக்க உதவும்.

டாப்ளர் ஸ்கேனின் நோக்கம் என்ன?

கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் முக்கியமான இந்த டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை மூலம் குழந்தையின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள், இதயம், தொப்புள் கொடி, நஞ்சுக்கொடி மற்றும் கருப்பையில் இரத்த ஓட்டம் பற்றி அறிந்துகொள்ள முடியும். இது கருவின் இதயத் துடிப்பை உறுதிப்படுத்த உதவுகிறது.

கருப்பை தமனி டாப்ளர் ஸ்கேன்: கருப்பை தமனிகள் இரத்த நாளங்கள் ஆகும், அவை இரத்தத்தை கருப்பையில் கொண்டு செல்கின்றன. பொதுவாக இந்த தமனிகள் அளவு சிறியதாக இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் இந்த தமனிகள் குறைந்த எதிர்ப்பை வழங்குவதற்காக அளவு (நீண்டு) அதிகரிக்கின்றன, இதனால் அதிக இரத்தம் அதன் வழியாக ஓட அனுமதிக்கிறது. இந்த பகுதியில் உள்ள டாப்ளர் ஸ்கேன் போதுமான இரத்தம் கருப்பையை அடைகிறதா என்பதை சோதிக்க உதவுகிறது.

தொப்புள் தமனி டாப்ளர் ஸ்கேன்: தொப்புள் தமனி டாப்ளர் ஸ்கேனில், குழந்தையிலிருந்து தொப்புள் கொடியின் வழியாக நஞ்சுக்கொடியை நோக்கி இரத்த ஓட்டம் சரிபார்க்கப்படுகிறது. இந்த ஸ்கேன் குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் தாயின் நஞ்சுக்கொடியிலிருந்து பெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. தாய் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமந்து வந்தால் அல்லது கர்ப்பகாலத்திற்கு குழந்தையின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தால் அல்லது குழந்தை ரீசஸ் ஆன்டிபாடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் தொப்புள் தமனி டாப்ளர் ஸ்கேன் செய்யப்படுகிறது.

நடுத்தர பெருமூளை தமனி டாப்ளர் ஸ்கேன் (எம்.சி.ஏ டாப்ளர் ஸ்கேன்): தொப்புள் தமனி டாப்ளர் ஸ்கேன் செய்யும் போது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் கண்டறியப்படும் போது, குழந்தையின் மூளையில் இரத்த ஓட்டத்தை சரிபார்க்கவே இந்த எம்.சி.ஏ டாப்ளர் ஸ்கேன் செய்யப்படுகிறது.

டக்டஸ் வெனோசஸ் டாப்ளர் ஸ்கேன்: மேலே உள்ள ஸ்கேன்களில் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தாலோ ஸ்கேன் முடிவில் ஏதேனும் சிக்கல் இருப்பதற்கான அறிகுறி கண்டாலோ இந்த ஸ்கேன் செய்வதற்கு வலியுறுத்தப்படுகிறது.

இந்த ஸ்கேன் செய்யும் போது, தொப்புள் கொடியின் சிரையிலிருந்து குழந்தையின் இதயத்திற்கு நன்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளத்தில் போதுமான ரத்தம் செல்கிறதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.

டாப்ளர் சோதனை எவ்வாறு செயல்படுகிறது?

முதலில் இந்த டாப்ளர் அல்ட்ராசவுண்ட் சோதனையானது வலியற்றது மற்றும் நோயாளிக்கு அசெளகரியத்தை உண்டாக்காது என்பதை புரிந்து கொள்ள வெண்டும்
இரத்த நாளத்தின் வழியாக இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதைப் பார்க்க இது பிரதிபலித்த ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஒலி அலைகள் நகர்ந்து கொண்டிருக்கும் ரத்த அணுக்கள் போன்ற திடப் பொருட்கள் மீது பிரதிபலிக்கும்போது அவற்றின் அலை நீளத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதைத்தான் நாம் டாப்ளர் நிகழ்வு என்கிறோம்.
ரத்த ஓட்டம் இல்லாவிடில் அவற்றின் அலை நீளத்தில் மாற்றம் இருக்காது.

இதிலிருந்து தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையின் நஞ்சுக்கொடிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் வீதத்தைக் கணக்கிடலாம். நஞ்சுக்கொடியின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமும் இதன் மூலம் சரிபார்க்கப்படுகிறது, மேலும் பிற முக்கிய இரத்த நாளங்களின் ஆரோக்கியமும். இரத்த உறைவு, தடுக்கப்பட்ட தமனிகள் அல்லது குறைக்கப்பட்ட இரத்த ஓட்டம் அனைத்தையும் இந்த பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும். அத்துடன் பிரி- எக்லாம்ப்சியா உண்டாக கூடிய ஆபத்தையும் முன் கூட்டியே கண்டறியலாம்.

சாதாரண அல்ட்ராசவுண்ட் மற்றும் டாப்ளர் அல்ட்ராசவுண்ட் இடையே உள்ள வேறுபாடு என்ன?

ஒரு சாதாரண அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது அவ இரத்த ஓட்டத்தின் வீதத்தைக் காண்பிக்காது. ஆனால் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனையில் நஞ்சுக்கொடி, தொப்புள் கொடி, குழந்தையின் மூளை, குழந்தையின் இதயத்தில் இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்தின் வீதத்தைக் காண்பிக்கும்.

சாதாரண அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குழந்தையின் உருவத்தை மட்டுமே காட்டுகிறது, ஆனால் டாப்ளர் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்கவும், இரத்த ஓட்ட விகிதத்தை அணுகுவதன் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவையும் கண்டறியவும் உதவுகிறது.

கர்ப்பக்காலத்தில் டாப்ளர் ஸ்கேன் வகைகள்

டிரான்ஸ் வஜைனல் டாப்ளர் ஸ்கேன் – பெயரை போன்றே இது கர்ப்பிணி பெண்ணின் (பெண் உறுப்பு) யோனி வழியாக சோதனை செய்யப்படுகிறது. மேலும் எக்டோபிக் கர்ப்பம் இருக்கிறதா என்று மருத்துவர் சரிபார்க்கவும் இந்த முறை உதவுகிறது.

கரு டாப்ளர் – இது உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கப் பயன்படும் கையடக்க சாதனம். இது குழந்தையின் இதயத் துடிப்புகளை கேட்கக்கூடியதாக மாற்றும்.

எனவே டாப்ளர் ஸ்கேன் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியை கண்டறிவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் மருத்துவரின் தொடர் சிகிச்சையில் தேவைப்படும் அனைத்து பரிசோதனைகளும் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பானது.

 

டாப்ளர் ஸ்கேன் குறித்து உங்கள் கேள்விகள்

 

கரு டாப்ளர் ஸ்கேன் அவசியமா?

ஆம் அவசியம். டாப்ளர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இரத்தத்தின் இயக்கத்தைக் கண்டறிய செய்யப்படுகியது. அதோடு குழந்தையின் இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்ய கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படுகிறது

கரு டாப்ளர் ஸ்கேன் எப்போது செய்யப்படுகிறது?

பொதுவாக மூன்றாவது மாதங்களில் டாப்ளர் ஸ்கேன் செய்யப்படும்.

டாப்ளர் சோதனை ஏன் செய்யப்படுகிறது?

டாப்ளர் பரிசோதனை செய்வதால் இரத்தக் கட்டிகள், கால் நரம்புகளில் மோசமாக செயல்படும் வால்வுகளை கண்டறிய முடியும்.

டாப்ளர் ஸ்கேன் குழந்தைக்கு பாதுகாப்பானதா?

ஆம் குழந்தை பாதுகாப்பாக இருக்கும்.

டாப்ளர் பரிசோதனை செய்வதால் வலி இருக்குமா?

டாப்ளர் ஸ்கேன் செய்வதால் எந்தவிதமான அபாயங்களும் இல்லை.

டாப்ளர் சோதனைக்கு முன் சாப்பிடலாமா?

டாப்ளர் பரிசோதனைக்கு முன்பு சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ கூடாது.

டாப்ளர் ஸ்கேன் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

பொதுவாக 30 நிமிடங்கள் ஆகும்.